கிரானைட், தாது மணல் கொள்ளை: விசாரணை நடத்த சகாயம் ஐ.ஏ.எஸ். தலைமையில் குழு- சென்னை ஹைகோர்ட் அதிரடி!

சென்னை: தமிழகத்தில் கிரானைட் மற்றும் தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் மாதம் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அந்த வழக்கில், கிரானைட், தாது மணல் மூலம் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது, மதுரையை போல் மற்ற மாவட்டங்களிலும் கிரானைட் மற்றும் தாது மணல் முறைகேட்டை கண்டறிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சட்டவிரோத கிரானைட், தாது மணல் கொள்ளை தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இன்றைய விசாரணையின் போது, நேர்மையான அதிகாரியான சகாயத்தை ஏன் அரசு அடிக்கடி இடம் மாற்றம் செய்கிறது என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி தமிழக அரசை விமர்சித்தனர்


சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், என்னிடம் ஒப்படைக்கப்படும் வழக்குகளை நேர்மையாக கையாளுவேன் என்று கூறியுள்ளார்.
 

அதே நேரத்தில் தன்னுடைய பணி இடம் மாற்றம் குறித்து எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க இயலாது என்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கூறியுள்ளார்.
தற்போது அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக இருக்கும் சகாயம் ஐ.ஏ.எஸ். அதற்கு முன்னர் கோ ஆப்டெக்ஸில் இயக்குநராக இருந்தார். அத்துறையின் அமைச்சரான கோகுல இந்திரா தனக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர்களை கொடுக்க சொன்னது உள்ளிட்டவைகளை சகாயம் துணிச்சலாக நிராகரித்து வந்தார். இதனால் அவர் மருந்துகள் சேவை கழகத்துக்கு மாற்றப்பட்டார். அடுத்த சில மணி நேரங்களிலேயே அறிவியல் நகரத்தின் துணைத்தலைவராக மாற்றப்பட்டார்.

இப்படி தனது பணிக்காலத்தில் 24 முறை சகாயம் பணி இடம் மாற்றம் செய்யப்பட்டதாலேயே சென்னை உயர்நீதிமன்றம் இது பற்றிய அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறது
 

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு அண்மையில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற எஸ்.கே. கவுல் தலைமையிலான பெஞ்ச் அதிரடியாக நேர்மையான அதிகாரி சகாயம் தலைமையிலான குழுவை அமைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 


Tags: Highcourt, Ias, Sagayam